Monday, September 21, 2009

அறிமுகத்துடன்.


என்றும் என் பிரியசகிக்கு.........!


தேவதையே பிரியசகி..

தேன் மழை தான் உன் கவிதை வரி.

நானும் ஓர் கவிஞ்ஞன் என்று

நாளும் நான் நினைத்திருந்தேன்.

உன்.............

முதல் கவிதை பார்த்தேன். மூச்சடைத்தே போனேன்.

மறுகவிதை பார்த்தேன் மரணித்தே போனேன் - இப்போ

எனக்குள்ளே சிறகடிக்கும் நினைவுகளை

உணக்குள்ளே செரிகிடத்துடிக்கின்றேன் - உன்

செல் அடிக்கும் போதெல்லாம் நான்

புல்லரிதே போனேன்.......!

உன் கவிதைக்கு அழகிருக்கு. அதைக் காதலிக்கும் மனம் எனக்கிருக்கு.

அறிவிருக்கு, நல் அழகிருக்கு, அரவணைக்கும் நல் பண்பிருக்கு,

கருவிருக்கு, கற்பனையிருக்கு, கதையிருக்கு, இசையிருக்கு - உணக்கது

எல்லாமே இணைந்திருக்கு.

ஆனால்...........?????????

என்னோடு இருந்ததெல்லாம் நானும் என் மனதும் தான்.

காகிதப் பூக்கள், கசங்கிய நாட்கள், காதல் கொண்ட நெஞ்சம்,

கறை பட்ட உள்ளம்...........

சோகம் கொண்ட மனது. தூங்கிடாத இரவு.

தாடி வைத்த முகம் தலையணையே வாழ்க்கை.

இப்படியே ஓடி விட்ட என்னுடைய நாட்கள்...............!!!!

கடவுள்.


கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.

ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.

நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது

என்பது உண்மை என்றதை அறிவாய்.

மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.

கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.

ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.

உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.

ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????

இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???

ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.

ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.

கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு

ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.

Wednesday, September 16, 2009

வாழ்க்கை.


வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.

இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.

பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.

வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.

நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???

வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??

பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.

காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.

ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.

அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.

எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????

பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.

வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

பொய்


புதிய சந்திப்புக்கள்,

புதுமையான மனப்பகிர்வு,

இளமை அனுபவங்கள்,

இன்பக் கைகலப்பு,

காலத்தின் இணைப்பு,

காதலின் சிறப்பு,

இதயத்தின் வருடல்,

இன்பத்தின் வருகை,

தேடலின் முடிவு,

விடியலின் தொடக்கம்,

செப்பனிட்ட நட்பு,

தெவிட்டாத பேச்சு,

நேரத்தின் அழைப்பு,

நின்மதியின் கலைப்பு,

இதுவெல்லாம் என்ன

எம்முடைய இணைப்பு.

சிந்திக்கச் செய்கின்ற,

சின்னம் சிறிய நிமிடம்,

கண்கள் கலந்து கொள்ளும் போதும்

மனங்கள் ஒருமிக்கும் போதும்

நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.

கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.

காமத்தால் இணைக்கப்பட்டது

வெறும் குளிர் காய்தல் ஆகிறது.

நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.

நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.

நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

மனம்.


மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........

Monday, September 14, 2009

எப்படி முடியும்.


காலத்தின் கட்டாயத்தினால்

கலக்கப் பட்டவர்கள் நாங்கள்.

நீ நினைத்திருக்க முடியாது,

இப்படி ஒருவன் இருப்பான் என்று.

ஏன் நான் கூட நினைத்ததில்லை.

இப்படி ஒரு நீ இருப்பாய் என்று.

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை இந்த இணைப்பை.

ஏனெனில் மனதுக்குள் மாட்டியுள்ள

அந்த மறைந்திருக்கும் உருவத்தை

என்னும் என்னால் மறக்க முடியவில்லை.

பின்பு ஏன் என்னுமொரு

கால இணைப்புக்குள் நான்????

செத்தவனுக்கு

மீண்டும் ஏன் வாழ்க்கைத் துடிப்பு??

உனது அழகான அந்த வருடலுக்கு

நான் வசப்பட்டுக்

கொண்டது உண்மை தான். - ஆனால்

பயமாகவிருக்கிறது.

மீண்டும் ஓர் பயணத்தை தொடர்வதற்கு.

ஏனெனில் எனக்குள்

என்னுமொரு உயிர் தவிப்பு.

உன் உள்ளத்தில் உள்ள

உண்மையான உறவு எனக்கு

உன்னதம் தருவதாய் இருந்தும்,,,

மனம் இம்சை படுகிறது.

ஏனெனில் அது ஒன்று தானே

எப்போதும் என்னோடு இருப்பது.

காலத்தின் இணைப்பில் நீ

இணைவாய் பின்

கட்டாயத்தின் பெயரில் நீ பிரிவாய்.

எப்படி என்னால்

என்னுமோர் கால இணைப்பில்.....??????

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,

உனது அன்பான அந்த வருடல்

என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

எனது மனத்திடையே நீ இப்போ.

எப்படி உன்னால் இது இயன்றது????

காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு

மீண்டும் ஒரு கலர் கனவு.

சிரித்துக் கொள்கிறேன்....

தெரியவில்லை ஏன் என்று???

சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்

ஆனால் கண்ணீர் வருவதில்லை.

நினைத்துக்கொள்கின்றேன்

நீ இல்லாத அந்த நிமிடத்தை.

உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.

உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.

காதலித்துக்கொள்

என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.

அப்படியானால்

எப்படி இது சாத்தியமானது????

காதலித்துக் கொள்ளவில்லை.....????

கைகள் பட்டதில்லை.......????

கண்கள் கலக்கவில்லை........????

ஆனால் இது கனவும் இல்லை.

எம்மிடையே என்ன உறவு இது?????

சிதறல்கள்.


வாழ்க்கைப் பயணத்தில்

வருகின்ற தடையங்களுக்காக - நான்

வருத்தப்படுபவன் அல்ல.

ஆனாலும் பாதைகளுக்காகப்

பயணத்தைத் தொடர்பவன் நான்.

பாதைகளும் பயணங்களும்

காலங்களுக்கு ஏற்ப்ப, மனிதர்களுக்கு ஏற்ப்ப

மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் மனிதர்கள் மாறுவது.......?????

சில வேளைகளில் நான்

சிறகடித்துக் கொள்கின்றேன்.

எனது சிறிய பருவத்தை.

பார்வதி அக்காவின் மாமரம்,

அதனருகில் மணற்கும்பி.

சுமதி அக்காவின் அன்பான வருடல்,

சுயநலமற்ற அரவணைப்பு .

மணற்கும்பியில் மாமா மகளும் நானும்

மண் வீடு கட்டி மகிழ்ந்தது அந்தக் காலம்.

சுமைகள் அற்ற மகிழ்வு.

அம்மாவின் தோழ் மீது நான்,

என்னருகில் தங்கை

அவளின் அன்பான முத்தம்,

தம்பியின் சண்டை,

இப்படி இப்படி எத்தனையோ இன்ப நிகழ்வுகள்.

அடிவளவு தென்னம் தோப்பு,

ஐயர் அம்மா மகள் அங்கலாய்ப்பு,

சித்தியின் சுட்டி மாடு,

மச்சாளின் கட்டியணைப்பு.....

இப்படி இப்படி எத்தனையோ

இன்பச்சிதறல்கள் எனக்குள்.

எல்லாம் எங்கே இப்போ........???????

நிஜங்கள்.


வெறும் கனவுகளுடன் வாழ்ந்து

களைத்து விட்டவன் நான். - எப்படி

நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......

என் சென்ற காலத்தை -இனம்

புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.

ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்

இருந்து விட முடியவில்லை இப்போது.

ஏதோ ஒன்று எனக்குள்

நின்று இம்சை தருகிறது.

உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.

இனம் தெரியாத மவுனம்,

காலம் தெரியாத நேரம்,

கணக்கிட முடியாத காலம்,

இவைகளுடன் எப்படி- நான்

இணைந்து கொண்டேன்???

எனக்குத் தான் எத்தனை

சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி

என்னால் மீண்டும்- நிஜங்களுடன்

நிற்க முடிகிறது???

சிந்தித்துப் பார்க்க -எனக்குச்

சிரிப்பாக வருகிறது.

ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே

அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.

என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............

நேற்றுவரை நான் நினைக்கவில்லை

என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.

நின்முகத்தைக் கண்டவுடன்

நினைவிழந்தேன் மறுகணமே.

காதல் இல்லை காமம் இல்லை - என்

கனவிலிலும் நீ இல்லை - ஆனால்

கண் இமைக்கும் பொழுதெல்லாம்

கண்மணியே எனக்குள் நீ.

சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி

நீ எனக்குள் என்று?

உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்

துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ

எறிந்து கொண்டிருக்கின்றேன்

ஏதேதோ எல்லாம் உணக்காக.

மீண்டும் எனக்குள் ஓர் வருடல்

அந்த மீறிய காலம் நோக்கி.

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்

அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ

புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இப்படிக்கு உணக்கு.

Sunday, September 13, 2009

எதிர்பார்ப்பு.


கன்னி மரியே

காலம் எல்லாம் உனை எண்ணி- நான்

இங்கு தனியே.

உன் இதயச்சிலுவையில்

அறையப்பட்ட பின்பும்

யேசுபோல் மீண்டும் என்னால்

உயிர்க்க முடியவில்லை.

ஆப்பு இழுத்த குரங்கு போல்

அகப்பட்டு கொண்டேன் உணக்குள் நான்.

உன்னுள்ளே ஊறியவன் என்பதினால்

என்னும் உனைத் தூக்கியெறியாமல்

துடைத்து துடைத்து வைத்துள்ளேன்.

யார் யாரோ சொன்னார்கள்

உன்னில் செழும்பு பிடித்துள்ளதாய்.

இறுக்கித் துடைத்துவிட்டால்

இது எல்லாம் சரிவரும் என்றேன்.

இது விளக்கு அல்ல வாழ்க்கை என்றனர்.

எனக்கு ஏதும் விளங்கவில்லை

என்று விலத்திக் கொண்டேன்.

பார்த்தனர் யாவரும் எனை ஒரு பரிதாபமாக.

கேட்டனர் சிலர்

தம்பிக்கு என்னதான் குறை என்று???

பட்ட மரத்திற்கு சட்டை போட்டு பார்த்தேன்

ஒரு வெட்டை வெளியில் வைத்து.

பச்சை மரம் ஒன்று சொன்னது

நீ ஒரு பயித்தியக்காரன் என்று.

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல

எனது இதயம்

கைகளால் அல்ல

பெரும் கடப்பாறையினால்.

திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..

என் இதய நாளங்கள்.

அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.

அருகதை அற்ற சில மானிடத்தால்,,

பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்

வருத்தப்படுகிறது எனது மனது.

ஏன் எனில்

கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....

.திருத்த முற்படும் போதெல்லாம்

திணறிக் கொள்கின்றேன்

பொருத்தமற்ற போக்குகளினால்......

எழில் நீ.


எழிலினி

எழில் - நீ

சரி,கம,பத - நீ

தந்திடு

உனை -நீ

திரிபதாகம் புஷ்பம்

கதரிமுகம் -நீ

கல்யாணி சிவரஞ்சனி

கவனி

எனை -நீ.

வேதனை.


ஓ.........பெண்ணே ஒரு கணம் என்னை உற்று நோக்கு உருக்குலைந்து கொண்டிருக்கும் - என்னை உன் கண்களுக்கு தெரியவில்லையா??? நீ கண்களுக்குள் மாட்டியுள்ள கண்ணாடி விம்பத்தில் -நான் என்ன தண்ணி அடித்தவன் மாதிரியா தெரிகிறது???? எண்ணிப் பார் பெண்ணே உன் மேல் வைத்த கண்களினால் நானே காயமுற்றதை, காதலிக்க வைத்த தடத்தில் நானே இறுகிப் போனதை. ஏன் தான் இப்படி என் இதயத்தினுள் முட்கம்பிகளை திணிக்க முயல்கிறாய் நான் என்ன கட்டுக் கடங்காத காதல் காளையா??? விட்டுப் போ........ என்று சொன்னால் எங்கேயாவது எட்டிப் போய் இறந்து விட மாட்டேனா என்ன???

Saturday, September 12, 2009

காதல் அரக்கி.


காதல் அரக்கியே

உன்மேல் காதல் கொண்டேன்.

அமிலம் பாதி அமுதம் பாதி

எல்லாம் உன்னில் கண்டேன்.

நீ எம் இதயங்களுக்கு

அடிக்கப்பட்ட ஆனி- நம்

வாழ்க்கை இடைக்கால

தன்னாட்சி அதிகாரம்

உன்னோடு என்பதனால் - எம்

இதயங்களுக்கே

உயிர் அடங்குச் சட்டமா???

அரக்கிகளுக்கெல்லாம் அரசி - நீ

உனைத் தரிசிக்க

வந்தவர்க்கு கொடுத்தாய்

வாய்க்கு அரிசி நீ

மரணத்தின் விழிம்பில் நின்று- உன்னிடம்

மண்டியிட்டு கேட்கிறேன் -எனை

மரணிக்க விடு என்று.

காதல் அரக்கியே

கணக்கிட்டு கொள்

இப்போது உன்னால் காயப்பட்டு

கல்லறை ஆக்கப்பட்ட

காதல் நெஞ்சங்கள் எத்தனை என்று

ஒன்றை மட்டும் உற்று நோக்கு

சாவதற்காக முளைத்த புதர்கள் அல்ல நாம்

வாழ்வதற்காக அமைந்த

காதல் சமுத்திரங்கள் -இதில்

நீயும் நினைத்தால்

நீந்தப் பழகிக்கொள்

நின்று ரசிக்க நினைத்தால்

சற்றே ஒதுங்கிக் கொள்.

கனேடிய தேசம்.


இங்கும் நான்

இப்போதும் தேடுகின்றேன் - என்

தூர தேசத்து உறவுகளை - இங்கே

பாசங்களுக்கு

வட்டி கட்டிக் கொண்டால்- தான்

நேசங்களுக்குள்

நெருக்க்கம் தெரியும் - இங்கே

ஓடங்கள்

நிறையவே இருந்தும் - அதன்

துடுப்புக்கள் விறகாக

அடுப்பெரிக்கப்படுகின்றன.

ஏன் எனில்

எங்கள் கரையை இனி

எவரும் எட்டக் கூடாது

என்பதர்க்காய்- இங்கு

பட்ட மரங்களுக்கு

பச்சை குத்திக் கொண்டவர்

தான் அதிகம்.

அட்சய பாத்திரத்தில்

அவலங்கள் தான்

அள்ளப்படுகின்றன.

கன்னியர்கள் இங்கே

பகுத்துண்ணப்படுகின்றனர்.

கட்டுப் பாடற்ற

கலாச்சாரத்தில் - எம்

தேசப்பற்று

செத்துப்போய்க்கொண்டிருக்கிறது.

ஏமாற்றம்.


எனதுயிர் நண்பா,

எப்படியடா இருக்கின்றாய்??

கந்தப்பு சொன்னார்-நீ

காசைக்கட்டி கனடாவிற்கு

வெளிக்கிட்டு,

ஏமாந்து விட்டாய் என்று- நான்

சொன்னேன்.

அவன் ஏமாறவில்லை.

இங்கு வந்து

நாம்தான் ஏமாந்து

விட்டோம் என்று.

ஆசையில் வெளிக்கிட்டோம் - அந்த

அழகான ஊரை விட்டு.

தோசை சுடுவதர்க்கு - கல்

சூடாவிருக்க வேணும்

என்று அடிக்கடி

அப்பு சொல்வார்- ஆனால்

இங்கு அதே போல்

இல்லாமல்

கல் சூடோ இல்லையோ

தோசை சுடப்புட்டு விடுகிறது.

கல்லை விடத் தோசை

கனமாவிருக்கும்,

சுடுபவர்களின்

மனசைப் போல்- ஏன்

எனில் சுட்டு சுட்டே

அவர்களும் கற்கள்

ஆகிவிட்டனர்.

அனேகம் விறகிற்காய்

நாங்களும் எரிக்கப் படுகிறோம்.

ஆனாலும் தோசை விற்பனைக்கு.

துடிப்பு.


உன்னிடத்தில் உள்ளதை

எனக்குத் தர மறுக்கிறாய் - நான்

கண்ணிமைக்கும் பொழுதில்

காதல் வதைப் படுத்துகிறாய்.

கண் என்பேன்.

மணி என்பேன்.

காதலித்தால்

என்னுயிர் என்பேன்.

பெண் என்பேன்.

மலர் என்பேன்.

பேதை நீ

என் கோவில் என்பேன்.

விண் என்பேன்.

முகில் என்பேன்.

வேதனைக்கு

நீ என் சுகம் என்பேன்.

வண்ண மலர் எடுத்து

வடிவாக

உனைத் தொடுத்து

என்னுயிரில் அதையிட்டு

இணைய மனம் துடிக்கிறது.

Tuesday, August 25, 2009

மறக்க முடியுமா??


கிட்டி அடித்ததும்

கிளித்தட்டு மறித்ததும்

பட்டியில் சுட்டியனைக்

கட்டிப் பால் கறந்து குடித்ததும்

வளவுப் புட்டியில்

பனம் கிழங்கு புடுங்காமல்

விட்டதனால்

குஞ்சியப்பு எனைக்

கொடுக்கோடு கலைத்ததும்

அம்மாவைக் கட்டிபு பிடித்து

விளையாடும் போது

காளையது எட்டியுதைத்ததும்

குட்டி போட்ட நாய்க்கு

கல்லெறிந்து - அது

கோபங்கொண்டு எனைக்

குரைத்துக் கடித்ததும்

கோவில் திருவிழாவில்

புக்கை வேண்டுவதர்க்காய்

சக்கரையக்கா மகளோடு

சண்டை பிடித்ததும்

நித்திரை கொள்ளாமல்

சின்னத்திரையில் படம் பார்த்துத்

திரிந்ததும் இத்திரையில்

இப்போதும் எனக்குள்

ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்பு.


அப்புவுக்கு

இங்கிருந்து சுப்பு எழுதுவது.

எப்படியணை இருக்கிறியள்??

இப்பவும் திண்ணை தானா???

அந்த மண்ண

நா விட்டு வந்து- இங்கு

கொண்ணையுடன்

சேர்ந்து இருக்கன்.

உண்ணாணச்

சொல்லிவிட்டன் - இது

உதவாத ஊரப்பு .

அப்பனைப்

பிள்ளையும் பாரான்.

ஆத்தாளை

மேய்ப்பார் நாய்போல்

காத்தால வெளிக்கிட்டால்

கள்ளர் போல்

இரவுதான் வாறார்.

பார்த்தாலோ கேட்டாலோ

பைத்தியமா என்பார்.. ?

கூப்பிட்டதற்காக

உங்களைப் பார்க்குறம்.

கூப்பாடு போட்டால்

கொண்டே போடுவம்

எண்டல்லோ வெருட்டினம்.

Monday, August 24, 2009

பானுமதி.


தேவதையே பானுமதி தெரிகிறதா????

என் இதயவலி

நீயும் என் காதல் நதி - அதில்

நீந்துகின்றேன் தன்னம் தனி- உன்

பேச்சு மொழி அழகினிலே - இப்போ

மூச்சைடைத்துப் போகின்றேன்.

உன்னழகு சிரிப்பு ஒலி - என்

உச்சிவரை இன்பவலி.

நேற்று வரை நினைத்திருந்தேன்

நின்மதியே இல்லையென்று - ஆனால்

பானுமதி உன்னாலே - நான்

முழுமதியாய் ஆகிவிட்டேன்.

அன்பான அரவணைப்பு - உன்

கரும் கூந்தல் தனியழகு

கருவிழிகள் கொவ்வையிதழ்,

கட்டுடல் உன் மேனி - அதை

தொட்டுவிட நினைக்கின்றேன் - உள்ளத்தை

உன்னை அல்ல.

உணக்குள்ளே செத்துவிடத் துடிக்கின்றேன்

உறவுடைய நாள் வரைக்கும் -உன்

உதட்டசைவு ஒலி கேட்டு - என்

உயிர் எங்கோ சென்று வரும்- உன்

மனத்தழகு நான் பார்த்து

மரணிக்கத்தான் சொல்லும்.

சங்குவரி கழுத்தழகு - அதில்

தாலி கட்டத் தான் சொல்லும்-உன்

நெஞ்சழகு நினை உற்று - என்

நின்மதியைத் தான் கொல்லும்.

இடுப்பழகு நான் பார்த்து -காதல்

போர் தொடுக்கத் தான் சொல்லும்- உன்

நடையழகு நான் கண்டு - பெரும்

படையெடுக்கத்தான் சொல்லும்.

முற்றுப்புள்ளி.


புள்ளி ஒன்று வைத்திருந்தேன்.

உணக்கும் எனக்கும் இடையே

நீ எனை நெருங்கும் போது

அது ஆச்சரியக்குறியானது!!!!!!!!!!!!!!

உனைத் தொட்டுப்பார்க்க

நினைத்ததினால் என் வாழ்க்கை

இப்போ கேள்விக்குறியானது???????

சற்று நான் தள்ளி இருந்திருப்பின்

நீ எனை மேற்கோள்குறி ஆக்கியிருப்பாய்"""""""""

கட்டுப்பாடு அற்றதனால்

இப்போ நீ இட்டாய் முற்றுப்புள்ளி.....

இதனால் தான் எமக்குள்ளே இடை-------வெளி.

கேள்வி.


என்னுயிர் இராட்சசிக்கு - உன்னால்

இதயத்தில் வலி பெற்றவன்

எழுதுகின்றேன்.

நேற்றிரவு நீ எனைக்

கூப்பிடுவதாக உணர்ந்தேன்.

திடுக்கிட்ட்டு கண்விழித்த போது- தான்

தெரிந்தது.

கனவு கூட கண்ணீர் வடித்தது.

ஓர் இரு ஆண்டா

உன்னை நான் காதலில் கண்டது??

உன் அறிமுகப்

பரீட்சையில் தேர்வடைந்த நான் -

எப்படி அடிமனத்திடையில்

எடுபடாமல் சென்றேன்????

Saturday, August 22, 2009

கண்ணீர்.


பெண்ணே
உன் கண்ணசைவிற்காக
காத்திருந்து காத்திருந்து
பார்வை இழந்தபின் தான்
எனக்குத் தெரிந்தது.
நான் ஒரு
பயித்தியக்காரன் என்பது.

உன் பெயரின் முதல் எழுத்தையே
என் முதுகெலும்பாய் எண்ணி வாழ்ந்து
கூன் விழுந்து போனேன்.
இப்போது தான்
எனக்குப் புரிந்தது
நான் ஒரு
முதுகெலும்பே இல்லாதவன் என்பது.

காதல் குழந்தையை சுமந்து சுமந்து
களைத்துப் போய்
கருத்தரித்தபோது
கண்ணீர்க் குழந்தை அல்லவா
எனக்குக் கிடைத்க்டிருக்கிறது.

எனது வருத்தம்

பரமபிதவிடம் போய் நான்
பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியர்களுக்கு அந்தக் கடவுள்
கண்களைக் கொடுத்ததர்க்காக.

உலகத்தின் சுவர்கள் எல்லாம்
உயர்ந்து உயர்ந்து
போன போதும் - எங்கள்
இதயத்தின் சுவர்களை
இன்னும் -நீங்கள்
இடித்துக்கொண்டிருக்கிறீர்களே
எதற்காக??

உனது கால்களுக்குக்
கோவில் கட்டுவேன் என்று
கத்திக்கொண்டிருந்தேன்
இப்போது - எனக்கு
வாயிருப்பதர்க்காகவே வருத்தப்படுகிறேன்.

ஒரு தலைக் காதல்.

கனவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருதலைக் காதலன் நான்.

நீ அறிய மாட்டாய்
நான் இங்கு
நெருப்புக்குள் வாழ்வது.

பொசுங்கிக் கொண்டிருக்கின்றேன்.
நீ ஒளி தர வேண்டும்
என்பதர்க்காய்.

எனது குருதி நாளங்கள்
கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.
ஏன் என்றால்
எமது
காதல் சுற்றோட்டத்தை
சுத்திகரிப்பதர்க்காய்.

எனக்குத் தெரியும் - நீ
எனக்குள் தான்
இருக்கின்றாய் என்று
ஆனால்
இதுவரையும் - நீ
அறிந்திருக்க மாட்டாய் - நான்
உணக்குள் இருப்பது
இது தான் ஒரு தலைக்காதல்.

தவிப்பு.

இழந்து விட்ட உணக்காக
இருந்து நான் அழுவதும்
ஏங்கித் தவிப்பதும்
இந்த நூற்றாண்டில்
இல்லாமல் போயாச்சு.

வண்டொன்று பூவருடி
தேன் சேர்த்த காதல் இது.
எங்கெங்கே சென்றாலும் - நீ
என்னோடு தானிருப்பாய்.
என்றெண்ணித் தானே
இது வரையும் - நான்
இருந்தேன்
ஆனால்
கன்றொன்றின் மேலேறிய - தேர்
போலாச்சு என் காதல்.

உனைப் பெண் பார்க்க
வரும் போது
பேசாமலா இருந்தாய்??? - சொல்
என்னை நீ
எண்ணாமல்
ஓம் என்று ஏன் சொன்னாய்......?????????

அந்நிய நாடு

அன்புள்ள நண்பனுக்கு.
அந்நிய நாட்டில் இருந்து- ஒரு
அனாதையின் குரல்,
இந்த மண்ணின் மனிதப் பறவைகளோடு
நானும்
இந்த மண்ணில் பறந்து கொண்டிருக்கின்றேன்.
உன்னோடு வந்து கலந்து விட என்
உள்ளம் துடித்தாலும்
என் காற்சிறகுகள் சற்றும்
களைப்பாறி விடுவதில்லை.
உன்னோடு வந்து என் உண்மை
கதை பேச
இருந்தாலும் ஒருசில
என் கண்ணீர்த்துளிகளை
உன் கைகளுக்கு தருகின்றேன்.
அழகான் வீடு - அதில்
அமர்ந்திருக்க யாரும் இல்லை.
ஆயிரம் வடிவங்களில் பஞ்சு மெத்தைகள்
அதில் படுத்துறங்க எங்களிற்கு நேரம் இல்லை.
அக்கமும் பக்கமும் அயலவர்கள்
அவர் யார் என்று இதுவரை பார்த்ததில்லை.
நித்தமும் நித்தமும் கண்விழித்து - நான்
நிரப்பிய வங்கிகள் கொஞ்சம் இல்லை.
உற்றமோ சுற்றமோ என்றுமில்லை- நாம்
உறவென்று சொல்லிட யாருமில்லை.
பட்டமும் பதவியும் பார்க்கவில்லை - இங்கு
பணம் சொன்ன சொல்லை யாரும்
மறுக்கவில்லை.
கெட்டவர் நல்லவர் யாரும் இல்லை - சட்டைப்
பைகளில் இல்லையேல்
வாழ்க்கையில்லை.
அப்பனைப் பிள்ளையும் பார்த்ததில்லை - அவன்
யார்?? என்று கேட்கவும் நேரம் இல்லை.
அன்னையை தந்தையை அணைத்ததில்லை - இங்கு
அன்பையும் பண்பையும் அறிந்ததில்லை.
வள்ளலும் வழங்கலும் எமக்குள் இல்லை - நல்ல
கொள்கையோ குறிக்கோளோ எவர்க்குமில்லை.
உண்ணவும் உடுக்கவும் முடிவதில்லை - அந்த
உயிர்ப்பசி எவர்க்குமே புரிவதில்லை.
அண்ணனும் தம்பியும் நெருக்கமில்லை - அவர்
அரைகுறை உடைகளில் குறைச்சலில்லை.
என்னும் சொல்லலாம் முடிச்சலில்லை - என்
சிறகுகள் துடிக்குது ஓச்சலில்லை.
இத்துடன் முடிக்கிறேன் எனி இரவு வேலை
இனியொரு முறை
இதைத்தொடர்ந்து சொல்வேன்.....
காத்திரு நண்பனே....

Friday, August 21, 2009

அழகி

ஆடல் அழகியே- உன்
எடுப்பான தோற்றத்தில்
இடையைத் தேடினேன்
இருந்தது போல் தெரிந்தது
இப்பொ இல்லாமல் போனது ஏன்?????
நீ.....
ஆடும் போது
அங்க அபினயங்கள்
எனை உன்னில்
அர்ப்பணித்து விட்டது
தேடுகின்றேன் மீண்டும்
உன்னிடையை
அதில் செருகிட நினைக்கின்றேன்
என்னுயிரை.......

கவிதை

எங்கே எனது கவிதை
இது வரை தேடுகின்றேன்
கிடைக்கவில்லை.
ஓடிக் களைத்த பின்பு
ஒரு கணம் உட்கார்ந்து
யோசித்தேன்-அது
ஒழித்து இருந்தது
உன் மனதில்
அடி கள்ளி
ஏனடி அபகரித்தாய்
என் கவியை
ஒரு சொல்லு சொல்லாமல் ஒழித்து வைத்தாய்
உன் மனதில்........

அன்பானவளே.

என் மனத்தோடு- நான்
சண்டையிட்டுக் கொள்கின்றேன்.
என்னை மரணிக்க விடு என்று- ஏனெனில்
என்னால் இப்போது
இயங்க முடியவில்லை- உன்
இனிமையான- அந்த இன்பக்குரல் இன்றி

உன் அன்பான் அரவணைப்புக்காய்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்- இவ்
அப்பாவியைத் தெரிகிறதா.....???????

சிந்தித்துப்பார் பெண்ணே- உன்னை
சினேகிக்க வைத்த தடத்தில்
நானே இறுகுண்டு போனதை
இப்போது சிரிக்கவும் தெரியாமல்
அழவும் முடியாமல்
திசைமாறிக்கொண்டிருக்கின்றேன்.

உன்னால்
மீண்டும் ஓர் இன்ப
இணைப்புக்குள் நான் இப்போ
தயவு செய்து தந்துவிடு
என் மனதை என்னிடமே..........

Friday, June 26, 2009

விதி

ஒரு கணம் விதி தான் மாறியதோ?
இல்லை அந்த காதல் தேவன் என் மீது ஒரு பார்வை வீசினையா
நீ எங்கோ நானோ இங்கு.....
கடல் தாண்டி ஒரு காதல்
தொல்லை தரும் தொலைபேசி இன்று காதல் தூதன்
உன் குரல் கேட்க துடிக்கும் என் இதயம்
புதிதாக கண்ணாடியும் என்னை பார்கின்றது
ஏனோ தெரியவில்லை உன் மீது மட்டும் இதனை ஈர்ப்பு

Written by
Sarangi Jeyakumaran

Wednesday, May 27, 2009

என் உயிர் உறவுகளே

என் உயிர் உறவுகளே
செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல்
நான் துள்ளித் திரிந்த தெருக்களில்
குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம்
தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு
வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்
கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு
சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம்
கண்களில் இருந்த கண்ணிர் வற்றி
நடைப் பிணமாய் நாம் இப்போ........
ஜயகோ....!
தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள்
செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர்
சத்துணவு திட்டமாவது தரும் படி
ஏன், எதற்கு எப்படி யானோம் -?
நாம் இப்படி ................?
கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில்
வராவிடின் தேடுங்கள் - அதற்கான
பதிலைத் தேடுங்கள்
என் துர தேசத்துறவுகளே
ஆயிரம் ஆயிரமாய் அழிக்கப் பட்டவர்கள் - உங்கள்
அக்கா தம்பி அம்மா அப்பா
அயலவர் உறவினர்
கிட்டி அடித்தோம் கிளித்தட்டும் மறித்தோம்
பட்டியில் சுட்டியனைக் கட்டி பால் கறந்து குடித்தோம் - வளவுப்
புட்டியில் பன்ங்கிழங்கு புடுங்கி மகிழ்ந்தோம்
கோவில் திருவிழாவில் கும்மாளம் அடித்தோம்.
காதல் கொண்டோம் -ஆனால்
இவை வேண்டாம் இனிமேலும்
தூக்கு மேடையில் கேட்பது ஒரு கைச் சோறுதான்
எம் பிள்ளைகளின் உயிர் காக்க வேனும் .
ஏதும் அற்ற எதிலீகளாய்
நாயை விடக் கேவலமாய் நாங்கள் உள்ளேம்
கம்பி வேலி காட்டு நரிக் கூட்டம்
சாவுக்காகவே தரப்படும் நஞ்சு உணவு
ஓய்வுறக்கம் இல்ல மன உளைச்சல்
யார் என்று கேள்வி அற்ற மானிடப் பிறப்பாய் நாம் இப்போ
திறந்த நரகச் சிறைக்குள் - பெரும்
சித்திர வதைகளோடு
ஓ..........
என் தேசத்து உறவுகளே
தட்டிக் கேளுங்கள் எம் சாவுக்குள்ளும் - ஓர்
நிம்மதியைத் தரும்படி - எம்
சாவை சகிப்புடன் ஏற்றுக் கொள்வதற்காய்..........
செத்துக் கொண்டேதான் இருக்கிறோம்
தினம் தினம்
சாவு எங்களுக்கு
இப்போ சாதாரண நிகழ்வு தான் - இருந்தும்
சாவிலும் ஒரு நிம்மதிக்காய்
உங்களிடம் கையேந்திக் கொள்கிறோம்
ஏனெனில் இறந்த பின்பும் இவன் தான்
அவனென்று சொல்வதற்காவது இருப்பீர்களே என்பதற்காய்
நாளை மீண்டு நாம் இருப்பின் தொடரும்.........?

Monday, May 25, 2009

தேசத்து உறவுகளே

என் தேசத்து உறவுகளே
நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு
நகரத்தின் குரல் இது
இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே
உயிர்களும் உடல்களும்
நாடு விட்டு நாடு வந்து
கூடு இழந்தவர் நாம் -பெரும்
பாடு பட்டு நாம் வளர்த்த -நல்
தேசியத்தில் பிறந்தவர் நாம்
காடு வெட்டி களனி ஆக்கி -நெற்
சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ
அநாதியற்று இப்புமியிலே
அனாதைகளாகி விட்டோம் - நம்
தேசம் ஒன்றின் விடிவிக்காய்
பாசங்களை தொலைத்தவர் நாம்
கூடு இழந்த குருவிகள் போல் - இத்
தெரு கோடியிலே கதறுகிறோம்
காப்பரும் ஒபாமாவும் என்ன
மகிந்கவின் கைப் பொம்மைகளா...?
சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண்
அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு
வாயிருந்தும் கண்ணிருந்தும் - எம்
வாயடைக்க வைத்து விட்டார்
நாம் கேட்பதென்ன... பொன் மணியா..?
எம் உயிர் கண்மணிகள் வாழ்வதுவே
கண்ணிருந்தும் குருடனைப்போல்
காட்சி தரும் காப்பரும்
ஏதுமே தெரியாமல்
இருக்கின்ற இவ்வுலகும்
காலத்தின் முன்னாலே
கை கட்டி மண்டியிடும்
காலம் வரை காத்திருப்போம் - எம்
கண்ணீர் பெருக்கோடு

Saturday, May 23, 2009

கறுப்பு அழகி

என்னுயிர் கறுப்பழகியே-உன்
கண்ணுக்குள் என்னடி காந்தமா வைத்துள்ளாய்? -நான்
எங்கு எங்கு சென்றாலும் எனை இழுத்த வண்ணம் உள்ளாய்- நீ
பொறுக்கவில்லை உன்னழகால் நான் பைத்தியமாய் ஆகி விட்டேன்
ஒய்யார நடை நடக்க உன் காலில் கீல் அணிந்தாய்-நான்
என்னவோ நினைத்து ஏங்கி விட்டேன் -நீ
எனை விட உயரமோ என்று எண்ணி-உன்
கண்ணில் காதலைத் தான் நான் கண்டேன்-உன்
காலடியைப் பார்க்கவில்லை
கறுப்பாக நீ இருந்தாலும் - எனக்கு
பொறுப்பானவள் நீ தானே - இப்போ
வெறுப்பாக நினைக்கிறேன் - அந்த
வெள்ளை நிறப் பெண்களை நான்