Saturday, September 12, 2009

காதல் அரக்கி.


காதல் அரக்கியே

உன்மேல் காதல் கொண்டேன்.

அமிலம் பாதி அமுதம் பாதி

எல்லாம் உன்னில் கண்டேன்.

நீ எம் இதயங்களுக்கு

அடிக்கப்பட்ட ஆனி- நம்

வாழ்க்கை இடைக்கால

தன்னாட்சி அதிகாரம்

உன்னோடு என்பதனால் - எம்

இதயங்களுக்கே

உயிர் அடங்குச் சட்டமா???

அரக்கிகளுக்கெல்லாம் அரசி - நீ

உனைத் தரிசிக்க

வந்தவர்க்கு கொடுத்தாய்

வாய்க்கு அரிசி நீ

மரணத்தின் விழிம்பில் நின்று- உன்னிடம்

மண்டியிட்டு கேட்கிறேன் -எனை

மரணிக்க விடு என்று.

காதல் அரக்கியே

கணக்கிட்டு கொள்

இப்போது உன்னால் காயப்பட்டு

கல்லறை ஆக்கப்பட்ட

காதல் நெஞ்சங்கள் எத்தனை என்று

ஒன்றை மட்டும் உற்று நோக்கு

சாவதற்காக முளைத்த புதர்கள் அல்ல நாம்

வாழ்வதற்காக அமைந்த

காதல் சமுத்திரங்கள் -இதில்

நீயும் நினைத்தால்

நீந்தப் பழகிக்கொள்

நின்று ரசிக்க நினைத்தால்

சற்றே ஒதுங்கிக் கொள்.

கனேடிய தேசம்.


இங்கும் நான்

இப்போதும் தேடுகின்றேன் - என்

தூர தேசத்து உறவுகளை - இங்கே

பாசங்களுக்கு

வட்டி கட்டிக் கொண்டால்- தான்

நேசங்களுக்குள்

நெருக்க்கம் தெரியும் - இங்கே

ஓடங்கள்

நிறையவே இருந்தும் - அதன்

துடுப்புக்கள் விறகாக

அடுப்பெரிக்கப்படுகின்றன.

ஏன் எனில்

எங்கள் கரையை இனி

எவரும் எட்டக் கூடாது

என்பதர்க்காய்- இங்கு

பட்ட மரங்களுக்கு

பச்சை குத்திக் கொண்டவர்

தான் அதிகம்.

அட்சய பாத்திரத்தில்

அவலங்கள் தான்

அள்ளப்படுகின்றன.

கன்னியர்கள் இங்கே

பகுத்துண்ணப்படுகின்றனர்.

கட்டுப் பாடற்ற

கலாச்சாரத்தில் - எம்

தேசப்பற்று

செத்துப்போய்க்கொண்டிருக்கிறது.

ஏமாற்றம்.


எனதுயிர் நண்பா,

எப்படியடா இருக்கின்றாய்??

கந்தப்பு சொன்னார்-நீ

காசைக்கட்டி கனடாவிற்கு

வெளிக்கிட்டு,

ஏமாந்து விட்டாய் என்று- நான்

சொன்னேன்.

அவன் ஏமாறவில்லை.

இங்கு வந்து

நாம்தான் ஏமாந்து

விட்டோம் என்று.

ஆசையில் வெளிக்கிட்டோம் - அந்த

அழகான ஊரை விட்டு.

தோசை சுடுவதர்க்கு - கல்

சூடாவிருக்க வேணும்

என்று அடிக்கடி

அப்பு சொல்வார்- ஆனால்

இங்கு அதே போல்

இல்லாமல்

கல் சூடோ இல்லையோ

தோசை சுடப்புட்டு விடுகிறது.

கல்லை விடத் தோசை

கனமாவிருக்கும்,

சுடுபவர்களின்

மனசைப் போல்- ஏன்

எனில் சுட்டு சுட்டே

அவர்களும் கற்கள்

ஆகிவிட்டனர்.

அனேகம் விறகிற்காய்

நாங்களும் எரிக்கப் படுகிறோம்.

ஆனாலும் தோசை விற்பனைக்கு.

துடிப்பு.


உன்னிடத்தில் உள்ளதை

எனக்குத் தர மறுக்கிறாய் - நான்

கண்ணிமைக்கும் பொழுதில்

காதல் வதைப் படுத்துகிறாய்.

கண் என்பேன்.

மணி என்பேன்.

காதலித்தால்

என்னுயிர் என்பேன்.

பெண் என்பேன்.

மலர் என்பேன்.

பேதை நீ

என் கோவில் என்பேன்.

விண் என்பேன்.

முகில் என்பேன்.

வேதனைக்கு

நீ என் சுகம் என்பேன்.

வண்ண மலர் எடுத்து

வடிவாக

உனைத் தொடுத்து

என்னுயிரில் அதையிட்டு

இணைய மனம் துடிக்கிறது.